வில்லி, புத்தன் என்னும் இரு வேடுவ மன்னர்களால் இந்த நகர் அமைக்கப்பட்டதால் 'வில்லிபுத்தூர்' என்று அழைக்கப்படுகிறது. பெரியாழ்வார் நந்தவனக் கைங்கர்யம் செய்து, பெருமாளுக்கு தினமும் மாலை சமர்ப்பித்து வந்தார். ஆழ்வாருக்குத் தெரியாமல் அவர் மகள் ஆண்டாள் மாலையை அணிந்து அழகு பார்க்க, ஒருநாள் ஆழ்வாருக்கு செய்த தெரிய கோபம் கொண்டார். ஆனால், கோதை சூடிக் கொடுத்த மாலையே தனக்கு உகந்தது என்று பகவான் கனவில் சொல்ல, அது முதல் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்ற பெயர் பெற்றாள்.
மூலவர் வடபத்ரசாயி என்ற திருநாமத்துடன் கிடந்த திருக்கோலம், புஜங்க சயனம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் ரங்கமன்னார். ரங்கமன்னாருக்கு வலப்பறம் ஆண்டாளும், இடதுபுறம் கருடாழ்வாரும் உள்ளனர். தாயாருக்கு ஆண்டாள் என்பது திருநாமம். மண்டூக முனிவர், பெரியாழ்வார் ஆகியோருக்கு பகவான் ப்ரத்யக்ஷம்.
பெரியாழ்வாரும், ஆண்டாளும் அவதரித்த ஸ்தலம். பெரியாழ்வாருக்கு தனி ஸந்நிதி உள்ளது. ஆண்டாள் கண்டெடுக்கப்பட்ட நந்தவனத்தில் துளசி செடி அருகில் ஆண்டாள் ஸந்நிதி ஒன்றும் உள்ளது. ஆண்டாள் மார்கழி நோன்பிருந்து 30 நாளும் 'திருப்பாவை' பாடிய ஸ்தலம்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த விஷ்ணு சித்தர் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய அந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு கருட வாகனத்தில் காட்சி, விஷ்ணு சித்தருக்கு அந்தப் பரிசை அளித்தார். பகவான் மீது மக்களின் கண்பட்டு விடுமே என்று விஷ்ணு சித்தர் பெருமாள் மீது 'பல்லாண்டு, பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு' என்று 'திருப்பல்லாண்டு' பாடினார். அவரது பக்தியை மெச்சிய பகவான், நீரே பக்தியில் பெரியவர் என்று வாழ்த்தினார். அன்றுமுதல் விஷ்ணு சித்தர் 'பெரியாழ்வார்' என்ற பெயர் பெற்றார்.
பெரியாழ்வாரும், ஆண்டாளும் தலா 1 பாசுரம் பாடியுள்ளனர். இக்கோயில் காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.
|